மட்டக்க்ளப்பில் பூசாரி வேடத்தில் வீடுகளிற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட 31 வயது பெண் கைது!!

மட்டக்களப்பு பகுதியில்  பூசாரி வேடத்தில் வந்த பெண் ஒருவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 பவுண் தங்க நகைகளை களவாடி சென்றிருந்தார் என காவல்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.

அதனையடுத்து கந்த வெள்ளிக்கிழமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகிக்கப்பட்ட பெண் சந்தேக நபரையும் அவரது கணவரையும் காத்தான்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் துமிந்த நயனசிறியின் வழிகாட்டலுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான காவல்துறை சார்ஜன்ட் அமித ரத்னாயக்க காவல்துறை உத்தியோகத்தர்களான நியாஸ், அருண் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

களவாடப்பட்ட வீட்டு உரிமையாளர் தமது வீட்டை காவல் செய்வதற்கான சடங்கு (பரிகார) பூஜை ஒன்றை செய்வதற்காக சம்பவ தினமான கடந்த 7 ம் திகதி புதன்கிழமை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பூசாரியான சந்தேக நபரை வரவழைத்துள்ளார்.

அவ்வாறு வரவழைக்கப்பட்ட அந்த பெண் பூசாரி களவாடப்பட்ட வீட்டில் அன்று இரவு தங்கவைக்கப்பட்டு பூஜை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மறுநாள் அதி காலை அப்பெண்பூசாரி அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில்,

பூஜை நிறைவடைந்த பின்னர் வீட்டின் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடி ஒரு பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலி கால் பவுண் நிறை கொண்ட மோதிரம் காணாமல் போயிருந்ததை அறிந்த வீட்டு உரிமையாளர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இம்முறைப்பாட்டிற்கமைய காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 31 வயதுடைய பெண்பூசாரியை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட  விசாரணையின் போது களவாடப்பட்ட தங்க ஆபரணங்கள் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் ஈடு செய்யப்பட்டிருந்ததுடன் ஏனைய நகைகள் தங்க நகைகடைகளில் விற்கப்பட்ட நிலையில்காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

இதேவேளை,

கொள்ளைச் சம்பவத்தில் கைதாகிய பெண் பூசாரி சந்தேக நபர் கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி , அக்கரைப்பற்று காவல்து நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் வழக்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைதான பெண் சந்தேக நபரும் அவரது கணவரான சந்தேக நபரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பினும் காவல் நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கோராப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *