கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச திரிபோஷா, பல மாதங்களாகச் சில பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கிடைக்காததால், உரிய விநியோகத்தை மேற்கொள்ள முடியாமல் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
இது குறித்துத் கருத்துத் தெரிவித்த இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க, உற்பத்திக்குத் தேவையான சோள இருப்பு இன்மையே இதற்குக் பிரதான காரணம் என்றும், 2024 ஆம் ஆண்டில் 4800 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்யக் கோரியும் அனுமதி தாமதமாகவே கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், அமைச்சரவை அனுமதிக்காக 2,000 மெட்ரிக் தொன் சோளம் மூன்று வாரங்களுக்கும் மேலாகச் சுங்கத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், கோரிய அளவில் 300 மெட்ரிக் தொன் மட்டுமே கிடைத்துள்ளதால் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார். மேல் மாகாணம் மற்றும் இரத்தினபுரி, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குத் தேவையான திரிபோஷா அனுப்பப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்துக்குப் போதுமான பாரவூர்திகள் இல்லாத காரணத்தாலும் விநியோகத்தில் தொடர்ந்தும் சிக்கல்கள் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
