மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கடந்த வருடம் 15 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், அவர்களுள் 13 பேரின் மரணத்திற்கு கசிப்பு பாவனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருந்துள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று (30.01.2026) நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உயிரிழந்தவர்களில் 20 வயதுக்குட்பட்ட நால்வரில் மூவர் கசிப்பு தாக்கத்தினாலேயே இம்முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது இப்பிரதேசத்தின் ஒவ்வொரு கிராமமும் கசிப்பு பாவனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் மூவர் கசிப்புக்கு அடிமையாகியுள்ள நிலையும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் சமூகக் கட்டமைப்புகளும் இணைந்து அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
