யாழ். சத்திர சந்தி விபத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு முறையான விசாரணையை கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!
யாழ். சத்திர சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது,
“அதி வேகத்தைக் குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்போம், அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும், மாணவர்களது உயிரைப் பறிக்காதே” என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமிட்டவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
சமூக செயற்பாட்டாளர் பி.தனுசியா தலைமையில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பில் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க.இலங்கேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் மா.நாகரட்ணம், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்திலிருந்து ஆரம்பித்து அராலி சமுர்த்தி வங்கியடியில் நிறைவுற்றது.
தமிழர் தாயக்கத்தை பொறுத்த வரையில் அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருகிறது.இந் நிலையில் குறித்த சிறுவன் நேற்று முன்தினம் தனது தாயாருடன் மண்ணெண்ணெய் வாங்க சென்ற போது பாரவூர்தியுடன் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.