முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை  முன்னெடுத்துள்ளார்கள்.

மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்ல முடியாமையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மண்ணெண்ணை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

இன்று(26/05/2022) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.

மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்போது,

மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் ஆர்ப்பாட்டகாரர்களை உள்ளே அழைத்து கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து னெ்று தொழில் புரியும் மீனவர்களுக்கும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.

இருந்த போதிலும் இவ்எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருள் எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை அத்துடன் கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணைய் வரவில்லை இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவினை எதிர்நோக்கியுள்ளனர். எனவே தயவு செய்து எமது மீனவ மக்களின் இந்த நிலையினை கருத்தில் கொண்டு தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு மீனவர்கள் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதன்போது,

கடற்தொழிலாளர்களிடம் கருத்து தொரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,

நேற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர்  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணைத் தட்டுப்பாடு தொடர்ச்சியாக இருக்கின்றது. மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.

எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் இன்று கதைத்துள்ளோம். இன்று இரண்டு தாங்கி மண்ணெண்ணைய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.

இலங்கையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுகின்றது. மொத்தமாக 320 மெற்றிக்தொன் தான் இருக்கின்றதாம். நேற்று நடைபெற்ற மாவட்ட செயலக அதிகாரிகளின் கூட்டங்களில் மாவட்ட செயலக அதிகாரிகளால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்களின் கோரிக்கையினை கடற்தொழில் அமைச்சுக்கும் எரி சக்தி அமைச்சிற்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டத்தில் மீனவர்களுடன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர்.

இருப்பினும்,

மீனவர்கள் இந்த விடயத்துக்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *