ஆஸ்திரேலியா டி20 தொடர்….. கேப்டன் பதவிக்கு சூர்யகுமார்- இளம் வீரர் இடையே போட்டி!!
இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதியுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
முதல் போட்டி வருகிற 22-ந்தேதி மொகாலியிலும், 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 27-ந்தேதியும் நடக்கிறது. டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உலகக் கோப்பையில் விளையாடும்போது காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். அவரது காயம் முழுமையாக குணமடையவும், தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகுவதற்காகவும் ஆஸ்திரேலிய தொடரில் ஓய்வு கொடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
இதனால் யார் கேப்டனாக செயல்படுவார்? என்ற கேள்வி எழுந்தது. தற்போது சூர்யகுமார் யாதவ் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே, துணைக் கேப்டனாக செயல்பட்டுள்ளார். டி20, ஒருநாள் போட்டிக்கான அணியில் முன்னணி வீரராக செயல்பட்டு வருகிறார்.
அதேவேளையில் ஆசிய கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார். இவரும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என ஒரு கருத்து நிலவுகிறது. என்றபோதிலும், சூர்யகுமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகு கேப்டன் பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.