நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடிக்கும்….. முழுமையான விபரங்கள்!!
வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளுக்கான வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கு, வடமேல், மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, தென் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தி4சையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை,புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஒரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்” எனத் தெரிவித்தார்.