ஐரோப்பிய ஒன்றிய விவசாய விதி – பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணி….. பற்றி எரியும் நாடாளுமன்றம்!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாய விதிகளுக்கு எதிராக பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய மாநாடு நடைபெறும் நிலையில், பிரசல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முற்றுகையிட்டு முடக்கும் நோக்குடன் அவர்கள் இந்த பேரணியை நடத்திவருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை முன்னிட்டு பிரசல்ஸ்சில் உள்ள சுரங்கப் பாதைகள் மற்றும் நகரில் உள்ள பல வீதிகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,
ஏற்கனவே போக்குவரத்து தாமதங்கள் காணப்படும் நிலையில் விவசாயிகளின் போராட்டம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது..
ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியை சூழ 1300 வரையான விவசாய கனரக வாகனங்கள் அணி வகுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காவல்துறையினரின் தடைகளை தகர்த்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நோக்கி செல்வதற்கு இன்று காலை 10.30 அளவில் விவசாயிகள் முயன்றுள்ளனர்.
இதன்போது,
காவல்துறையினர் விவசாயிகள் மீது நீர்த் தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் பதிலுக்கு முட்டைகள், மதுபான போத்தல்கள், எரிகுண்டுகளை வீசியும் டயர்களை எரித்தும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்காரணமாக,
நாடாளுமன்ற வளாகத்தை சூழவுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீ எரியும் அதேவேளை கரும்புகையும் பரவியுள்ளது.
குப்பைகள் மற்றும் தீப்பிழம்புகளுக்கு நடுவே பெல்ஜியத்தின் உருக்கு தொழில்துறையின் முன்னோடியாகவும் முக்கிய தொழிலதிபராகவும் கருதப்படும் ஜோன் கொக்கறல்லின் சிலையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், மிகக் கடுமையான ஐரோப்பிய விதிகள், உற்பத்தி பொருட்களுக்கான குறைந்த விலைகள் மற்றும் நிர்வாகச் சுமை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி விவசாயிகள் இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.