எமது பிறப்பு முதல் நாம் இறப்பைத்தேடி ஓடுபவர்களாகத்தான் இருக்கின்றோம். வாழ்நாள் தொடங்கியதில் இருந்து அழகாக நாம் சேர்த்து வைத்த நாட்களில் நாம் செய்த சாதனைகளும் இருக்கும் சோதனைகளும் இருக்கும் அவை நமக்கு கடந்தகாலங்களாக மாறிக்கொண்டு செல்ல எதிர்காலத்தை நோக்கிய ஓட்டம் வேகமாக இருக்கும். ஆனால் நாம் எதிர்காலத்தை எதனூடாக வேகமாக ஓடுகின்றோம் கடக்கின்றோம் என்பதில் தான் எமது ஆயுள் அடங்கியிருக்கின்றது. நாம் அன்றாட வாழ்க்கையில் எங்கு எதனூடாக வேகமாக ஓடவேண்டுமென்று தெரியாது ஓடுகின்றோம். ஒரு ஓட்டப்பந்தயத்தில் நாம் ஓடுவது சாதனைக்காக ஆனால் எமது வாழ்க்கைப் பயணத்தில் வீதிகளில் ஓடுவது எதற்காக எம் உறவுகளின் வேதனைக்காகவா? நாம் செல்லும் வழிகளில் வீதிகளில் தவளும் தவளைகளை மிதிப்பதையே வேதனையாகக் கடக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்று எமது உயிரும் தவளைகளின் உயிரைப் போன்றது என்று ஏன் தெரியவில்லை.
பெரிய பெரிய வாகனங்கள் வீதிகளில் அங்குமிங்குமாக வந்த வண்ணம் உள்ளபோது ஏன் அவசரம்? ஏன் கவனயீனம்? ஒரு வினாடிகளுக்குள் பிரியநினைக்கும் உயிரை எமது கையில் பிடிக்க நாம் அதே ஒரு வினாடி யோசித்தால் போதும் ஆனால் இருந்தும் அவசரம் ஏன்? பொறுமையாகச் சென்றால் உயிர் போகுமா இல்லை பொறுமை காக்காவிடினே உயிர் போகும் தினம் தினம் சிந்திப்போம் எம்மைப் பழக்கப்படுத்துவோம் பொறுமையின் வழியில் பயணித்தால் இல்லை மரணம் என்பதை நிதானிப்போம். அழகிய வாழ்க்கையை அழகாக வாழ்வோம் இன்றும் ஒரு விபத்துச் செய்தி எம் செவிகளுக்கு இலங்கையில் அதிகமான இந்த விபத்துக்களுக்கும் மரணங்களுக்கும் ஓய்வே கிடையாதா நாம் தான் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
இன்றையதினம் மாலை 05.00 மணியளவில் இயக்கச்சியில் கோரவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச்சென்ற காரும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் கனரக வாகனமும் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிப்பர் மற்றும் காரில் பயணித்தவர்கள் காயத்துடன் தப்பியுள்ளார்கள். இந்த விபத்தில் சிக்கியவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விபத்தில் சிக்கிய டிப்பர் தடம் புரண்டுள்ளதுடன் Wagon R ரக கார் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இறைவன் நமக்களித்த சித்தங்களை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு கவனயீனம் மற்றும் தவறுகளால் மற்றையவர்களையும் பாதிப்படையச் செய்வதோடு எமது குடும்பத்தினரையும் தவிக்க வைக்கின்றோம். எனவே நாம் அனைவரும் பாதுகாப்பாக வாகனத்தை செலுத்துவதனூடாக விபத்துக்களைத் தவிர்த்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம்.

