நடு வீதியில் இளைஞன் மீது பாய்ந்து தாக்கிய பொலிஸ் அதிகாரி- மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவாகவுள்ள முறைப்பாடு!
பன்னிப்பிட்டிய பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் லொறி சாரதியைத் தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அவரை இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பொலிஸ் உத்தியோகஸ்தரின் தாக்குதலுக்குள்ளான இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாக்குதலுக்குள்ளான இளைஞன் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று மாலை கொழும்பு நோக்கி சென்றுள்ளார்.
மஹரகம நகர் வரும் போது அவருக்கு தூக்கக் கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி உரசியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கியுள்ளார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியான லொறி சாரதியை தாக்க பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தரும் தாக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இளைஞனைத் தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனவும், ஆனால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இளைஞன், தலை மற்றும் வயிறு வலிப்பதாக அவரைப் பார்க்கச் சென்ற அவரது நிறுவன பணிப்பாளரிடம் கூறியுள்ளார்.
ஆயினும் அவருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தொழில் புரியும் அப்பே ஹார்த்திகேய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிறுவனம் யூனி பிரதர்ஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும். இளைஞரின் நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாக தெரிவித்த அவர்கள் இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்ய இருப்பதாகம் தெரிவித்துள்ளனர்.