இரவு, பகலாக எரியும் சடலங்கள்- நோயாளிகளின் உடலில் என்ன நடக்கிறது? மருத்துவரின் அதிரவைக்கும் தகவல்கள்
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பது பற்றி விளக்குகிறார் மருத்துவர்.
தீவிரமடைந்த கொரோனா
“இந்த முறை கொரோனா வைரஸின் திடீர் மாற்றமடைந்த வடிவங்கள் பரவத் துவங்கியிருக்கின்றன. இப்படிப் புதிதாக மாற்றமடைந்த வைரஸ்களைப் பொறுத்தவரை, அவை மூக்கில், அதாவது மூச்சுக் குழாயின் துவக்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன.
கடந்த முறையைப் போல் அல்லாமல், நோயாளிக்கு ஆரம்பகட்ட அறிகுறி ஏற்படும்போதே, அதிக அடர்த்தியில் இந்த வைரஸ்கள் காணப்படுகின்றன. தவிர, பரவும் வேகமும் தொற்றும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
முன்பு, நோய்க்கான அறிகுறியே இல்லாமல் இருப்பவர்கள் அதிகம் இருப்பார்கள். கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு நோய்க்கான அறிகுறியே இருக்காது. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்குத்தான் நோய்க்கான அறிகுறி இருக்கும்.
ஆனால், இப்போது நோய்க்குறிகளுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது” என்கிறார் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரான டாக்டர் பரந்தாமன்.
இது தவிர, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மோசமான கட்டத்திற்குச் செல்வது மிக வேகமாக நடக்கிறது. முன்பெல்லாம் இதற்கு நோய் தாக்கி, ஏழு – எட்டு நாட்களாகும். ஆனால், இப்போது 4-5 நாட்களிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர்.
எளிதில் பரவும் வைரஸ்
அதேபோல, கடந்த முறை குழந்தைகள், இளைஞர்களைப் பாதிப்பது மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இப்போது அது மிகவும் அதிகரித்திருக்கிறது.
முன்பு, இளைஞர்களுக்கு வந்தால் பெரும்பாலும், நோய்க்குறிகள் மிகக் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது வருபவர்கள், தீவிர நோய்க்குறிகளோடு, நிமோனியா நிலையில் வருகிறார்கள் என்கிறார் அவர்.
இதுபோக, ஒரு குடும்பத்தில் ஒருவரை நோய் தாக்கியதென்றால், குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் நோய் தாக்கியிருக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஏனென்றால், நோய்க்குறி இல்லாத காலகட்டம் மிகக் குறைவாக இருப்பதால் நோய் தாக்கிய ஒருவர் தனக்கு நோய் தாக்கியிருப்பதை அறிவதற்கு முன்பே அந்நோய் பரவுவது அதிகரித்திருக்கிறது. இதனால், குடும்பத்தில் உள்ள அனைவருமே அதனால் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள்.
சிகிச்சை முறையில் மாற்றம் இருக்கிறதா?
“சிகிச்சையைப் பொறுத்தவரை அதே சிகிச்சைதான் தொடர்கிறது. ஆனால், மருத்துவர்களின் அனுபவம் அதிகரித்திருக்கிறது. இப்போது ஒருவருக்கு ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளும் திறன் 80 ஆக குறைந்துவிட்டால் உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் அளிப்பதைத் துவங்கிவிடுகிறோம். வைரஸ் எதிர்ப்பு மருந்து, வென்டிலேட்டர் போன்றவற்றை அளித்தவுடன் அவர்கள் நிலை சற்று மேம்பட்டுவிடுகிறது.
உணவும் அருந்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால், வென்டிலேட்டரை எடுத்த பிறகு, ஆனால், சற்று நடக்க ஆரம்பித்தவுடன், அதாவது கழிப்பறைக்கு சென்று வந்தாலே ஆக்சிஜன் உள்ளிழுக்கும் அளவு மிகக் குறைய ஆரம்பித்துவிடுகிறது. நோயாளி மிகச் சிக்கலான இடத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.
குப்புறப்படுக்க வைக்கிறோம்
ஆகவே, இம்மாதிரியான நோயாளிகள் கழிப்பறைக்கு நடந்துசெல்வதை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்கிறோம். தவிர, படுக்கும்போது குப்புறப்படுப்பதை மிகவும் ஊக்குவிக்கிறோம்.
ஒரு நாளைக்கு 16 மணி நேரத்திற்கு குப்புறப்படுக்க வேண்டும். வீட்டிற்குச் சென்ற பிறகும் இரண்டு மாத காலத்திற்கு குப்புறப்படுப்பதை ஊக்குவிக்கிறோம்.
நன்றாக குணமடைந்துவரும் நோயாளிகள் வாய் வழியாக உணவருந்தும் நிலை ஏற்பட்டவுடன், சற்று அதனை அகற்றிவிட்டு உணவருந்த ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால், இப்போது உணவருந்தும் அந்த சிறிய காலகட்டத்தில்கூட மறுபடியும் ஆக்ஸிஜன் குறையும் நிலை ஏற்படுவதைப் பார்க்கிறோம். தண்ணீர் குடிப்பதற்காக கொஞ்ச நேரம் ஆக்ஸிஜனை அகற்றினால்கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடுகிறது.அதனால், மூக்கில் மட்டும் தொடர்ந்து ஆக்ஸிஜனை அளிக்கும் வசதியை செய்துவிட்டு, சாப்பாட்டு, தண்ணீர் ஆகியவற்றைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம்.