இந்தியப் பொலிஸாரின் அதிரடி! மூடை மூடையாக மீட்கப்பட்ட இலங்கைக்கு கடத்தவிருந்த பொருட்கள்!!
தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து கீழக்கரை வழியாக இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள் மற்றும் ஏலக்காய்களை பொலிஸார் நேற்று பறிமுதல் செய்ததுடன், மூவரை கைதுசெய்தும் உள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த காரை நிறுத்தி அதில் வந்தவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினா்.
அப்போது அவா் உரிய பதிலை அளிக்காதமையினால் காரை சோதனையிட்டனா். இதன்போது அதில் 15 மூட்டைகளில் சுறா மீன் இறக்கைகள் மற்றும் 5 மூட்டைகளில் ஏலக்காய்கள் இருந்தன.
இதைத் தொடா்ந்து காரை ஓட்டி வந்த சாரதியை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கீழக்கரையைச் சோ்ந்த ஒருவரின் கிடங்குக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.
இதனையடுத்து, குறித்த நபரின் கிடங்கை பொலிஸார் சோதனையிட்டனா். அதில், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடியிலிருந்து கொண்டு வரப்பட்டவையுடன், கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றையும் சோ்த்து 15 மூட்டைகளிலிருந்து 9 லட்சம் இந்திய ரூபா பெறுமதியுடைய 450 கிலோ சுறா மீன் இறக்கைகள், 5 மூட்டைகளிலிருந்த 6 லட்சத்து 25 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதியான 250 கிலோ ஏலக்காய்கள், 1 இலட்சத்து 37 ஆயிரத்து 500 இந்திய ரூபா பெறுதியுடைய 55 கிலோ கடல்அட்டைகள் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன்போது கிடங்கின் உரிமையாளர், காரின் சாரதி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.