டொலர் நெருக்கடிகளுக்கு இரு மாற்று வழிகள் உள்ளன….. கலாநிதி ஹர்ஷ டி சில்வா!!
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிகளுக்கு இரு மாற்று வழிகள் உள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதும் வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்துவதும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha d Silva)தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இரண்டாவது தெரிவான மீள்திட்டமிடலுக்குச் சென்றால் செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை அடுத்ததடுத்த ஆண்டுகளுக்கு பிற்போட முடியும்.
எனவே,
இதன் மூலம் கையிருப்பிலுள்ள டொலர் குறைவடையாமல் பேண முடியும். அதே போன்று முதற்தெரிவான சர்வதேச நாயணய நிதியத்தை நாடினால் வருடாந்தம் செலுத்த வேண்டிய கடன் தவணையை 10 , 15 அல்லது 20 வீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும்.
அவ்வாறன்று இதே நிலைமை தொடருமாயின் பொருளாதார நெருக்கடிகள் எதிர்வரும் குறுகிய காலத்திற்குள் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக உக்கிரமடையும்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன் ஊடாக கடன் பெற முடியாது. கடன் கோரிகாலும் 1 அல்லது 2 பில்லியன் டொலர்களை மாத்திரமே பெற முடியும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆகக் கூடிய தொகையாக 2.6 பில்லியன் டொலரை மஹிந்த ராஜபக்சவே பெற்றுள்ளார்.
இதனை நாடுவதன் மூலம் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் இலங்கைக்கு இடையில் மூன்றாம் தரப்பாக செயற்பட்டு எமக்கான கடன் மீள் செலுத்தல் சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.
இந்நிலையில் வெளிநாட்டு கடன்களுக்கு அப்பால் உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கம் 1.46 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது. இதனை அரசாங்கம் மீள செலுத்தாவிட்டால் நாட்டின் வங்கி கட்டமைப்பு பெறும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டுமாயின் விதிக்கப்படும் ஒரேயொரு நிபந்தனை அரச நிதி கொள்கையாகும்.அதனை அரசாங்கம் முறையாகப் பேண வேண்டும்.
எனினும் அண்மையில் இலங்கைக்கு மூன்றரை பில்லியன் டொலரை தருவதாகவும் , அதனை பெற்றுக் கொள்வதாயின் எல்.என்.ஜி.யின் ஒரு பகுதியை தமக்கு வழங்க வேண்டும் என்றும் ஓமான் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட மாட்டாது
இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரையான 12 மாதங்களில் 7726 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால்,
தற்போது 2200 மில்லியன் டொலர் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. அதில் 1600 மில்லியன் டொலர் மாத்திரமே பயன்படுத்தக் கூடிய நிதியாகும். இம்மாத இறுதியில் இந்த நிதி மேலும் குறைவடையும். இவ்வாறான நிலையில் ஒருபுறம் கடன் மீளச் செலுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. அதே போன்று மறுபுறம் அத்தியாவசிய பொருள் இறக்குமதி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதுஎன மேலும் தெரிவித்துள்ளார்.