பண்டாரநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்படட 23வயது யுவதி!!
சர்வதேச பொலிஸாரால் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி இலங்கைக்குள் வர முயற்சித்த போது இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அந்த யுவதியை பிரேசில் நாட்டுக்கு நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கரோலின் அருவுஜோ டி சில்வா (Caroline Araujo De Silva) என்ற 23 வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த இந்த யுவதி சர்வதேச ரீதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்.
பிரேசில் அரசாங்கம் அந்த யுவதியை கைது செய்ய முயற்சித்த போது அவர் அங்கிருந்து தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இதன் காரணமாக அந்த யுவதியை கைது செய்ய பிரேசில் அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை கோரியிருந்தது.
இதனடிப்படையில் சர்வதேச பொலிஸார் யுவதியை கைது செய்வதற்கான சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பித்திருந்தனர்.
தாய்லாந்துக்கு தப்பிச் சென்றிருந்த இந்த யுவதிக்கு அந்நாட்டில் தங்கியிருப்பதற்கான விசா அனுமதி காலம் முடிவடைந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுள்ளார்.
தன்னை கைது செய்ய சர்வதேச பொலிஸார் சிகப்பு அறிக்கை பிடியாணையை பிறப்பித்திருப்பதை யுவதி ஏற்கனவே அறிந்துள்ளார்.
எனினும் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்த யுவதி இன்று அதிகாலை 12 மணிக்கு தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
விமானத்தில் இருந்து இறங்கிய யுவதி குடிவரவு அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது யுவதி சமர்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை மேலதிக ஆய்வுக்காக அதிகாரிகள் தேச எல்லை கட்டமைப்பு பிரிவின் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
அப்போது இந்த யுவதி, சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் என தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் சட்ட ரீதியான விடயங்களை உறுதிப்படுத்தியதும் சர்வதேச விமான சேவைகள் சட்டத்திற்கு அமைய அவர் வந்த விமானத்தில் தாய்லாந்துக்கு திரும்பி அனுப்பி இருக்க வேண்டும்.
எனினும்.
இந்த யுவதி சர்வதேச போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டு சர்வதேச பொலிஸாரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதால் அவர் தேடப்பட்டு வரும் பிரேசிலுக்கு அனுப்பி வைக்க தேவையான ஆவணங்களை தயார்ப்படுத்திய பின்னர் இன்று காலை 10.20 அளவில் கட்டார் விமான சேவையின் விமானத்தில் ஊடாக தோஹா வழியாக பிரேசிலுக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.