இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக…. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக
சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதி (leave to proceed) தொடர்பில் குறித்த மனுவானது உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது.
பிரதிவாதிகள் மூவர் மாத்திரமே நீதிமன்றத்திற்கு முன்னிலையாகினர்.
முதலாவது பிரதிவாதியான சட்டமா அதிபர் திணைக்களம் (அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்),
8 ஆவது பிரதிவாதியான நந்தலால் வீரசிங்க மற்றும் 9 ஆவது பிரதிவாதியான இலங்கை நாணயச் சபை ஆகியோர் சார்பில் அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இதுபோன்ற வழக்கொன்று (SCFR 195/2022) ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்
அது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு முன் முன்னிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 8 ஆவது மற்றும் 9 ஆவது பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதனடிப்படையில்,
இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வது பற்றி நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என குறித்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்குமாறு நீதிமன்றத்தினால் பிரதம நீதியரசருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
பிரதிவாதிகளான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, பேராசிரியர் W.D லக்ஷ்மன், அஜித் நிவாட் கப்ரால் (முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர்) மற்றும் S.R ஆட்டிகல (திறைசேரியின் முன்னாள் செயலாளர்) ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என குறித்த மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்,
நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் தவறான நிர்வாக நடவடிக்கை என்பவற்றுக்கு குறித்த பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் அவற்றுக்கான காரணங்கள் தொடர்பில் விசாரித்து அது பற்றிய அறிக்கை ஒன்றினை தொகுக்க உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் ஒரு குழுவினை நியமிக்குமாறு குறித்த மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சந்திரா ஜயரத்ன, ஜெஹான் கனக ரட்ன மற்றும் ஜூலியன் போல்லிங் ஆகியோருடன் இணைந்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது குறித்த மனுவினை தாக்கல் செய்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தரவுடன் இணைந்து S.A பேலிங், சிந்தக்க பெர்னாண்டோ, சயுரி லியனசூரிய மற்றும் மனிஷா திஸ்ஸநாயகே ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகினர்.