பேட்டரி சர்ச்சை விவகாரம் – 113 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்தும் ஆப்பிள்
அமெரிக்காவின் 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 7 மற்றும் ஐபோன் எஸ்இ ஆகிய மாடல்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட்கள் வழங்கப்பட்டது.
அந்த அப்டேட்களால் ஐபோனின் பேட்டரி திறன் குறைந்தது. இந்த பேட்டரி திறனை அதிகரிப்பதற்காக புதிய சாப்ட்வேர் அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.
அந்த சாப்ட்வேரை அப்டேட் செய்த சில நாட்களுக்கு பின்னர் பயனாளிகளின் ஐபோன் செயல் வேகம் பெருமளவு குறைந்தது. இது ஐபோன் பயனாளர்களை தங்கள் பழைய ஐபோனில் இருந்து புதிய ஐபோன் வாங்க தூண்டியது. இதன் மூலம் ஐபோன் விற்பனை அதிகரித்தது.
இதற்கிடையில், புதிய ஐபோன்களை விற்பனை செய்வதற்காக பழைய ஐபோன்களில் பேட்டரி செயல்திறனை வேண்டுமென்றே குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள 33 மாகாண அரசுகளின் ஒழுங்குமுறை ஆணையர்கள் வழக்குத்தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கு மீதான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேட்டரி செயல்திறனை வேண்டுமென்றே குறைத்ததற்காக 33 மாகாண அரசுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, 113 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடை 33 மாகாண அரசுகளுக்கு வழங்க ஆப்பிள் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.