சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்…. கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. பின்னர் வந்த படங்களும் விஜய்க்கு கைகொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய் பூவே உனக்காக படம் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தார்.
இதையடுத்து தனது கடின உழைப்பால் திரையுலகில் படிப்படியாக உயர்ந்த விஜய், திருமலை படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதையடுத்து அவர் நடித்த கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானது மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்தது.
தொடர்ந்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களில் சமூகக் கருத்துக்களையும் பேசத் தொடங்கிய விஜய், இப்படங்கள் மூலம் ரசிகர் வட்டத்தை பெரிதாக்கினார். இதையடுத்து இவர் நடித்த மெர்சல் 200 கோடி ரூபாய் வசூலையும், பிகில் 300 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டி சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ‛28YearsOfBeIovedVlJAY‘ என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்த 28 ஆண்டுகளில் விஜய் இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 64வது படமான மாஸ்டர் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருப்பதால், இதுவும் வசூலில் புதிய உச்சம் தொடும் என்பதில் சந்தேகமில்லை.