கொரோனாவால் நிர்க்கதியில் இலங்கை மக்கள்! வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் தலைவர்கள் – சஜித் சீற்றம்!!
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையை ஒழிப்பது உட்பட நாட்டு மக்களின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட தலைவர்கள் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் மக்களை நிர்க்கதி நிலைமையில் தள்ளி விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைமை உருவாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் தொடர்ந்தும் மக்களுடன் இருந்த இவர்கள், நாட்டிற்கு தலைமைத்துவம் தேவையான நேரத்தில் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டு, நாட்டில் இருந்து தப்பிச் செல்வதால், அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார். கொரோனா தடுப்பு சம்பந்தமாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ள நிலைமையில் தற்போதைய அரசாங்கம் அந்த வேலைத்திட்டத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமக்கு பொறுப்பை வழங்கிய மக்களை நிர்க்கதி நிலைமைக்கு தள்ளி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு பதிலாக மக்களுடன் இருந்து அவர்களின் துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டு மக்களை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.