கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக உப்புக்கரைசல்! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!!
ஜெர்மனியின் லோவர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள ப்ரைஸ்லண்ட் எனும் மாவட்டத்தில் மக்களுக்குத் தடுப்பூசிக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உப்புக்கரைசல் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரியும் தாதி ஒருவர், தடுப்பூசிக்குப் பதில் உப்புக்கரைசல் போட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதையடுத்து, தடுப்பூசியை மீண்டும் ஒருமுறை போட்டுக்கொள்ளும்படி சுமார் 8,600 பேரிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதாக, உள்ளூர் மன்றத் தலைவர் தெரிவித்தார். உப்புக்கரைசல் பாதிப்பை ஏற்படுத்தாது. என்றாலும், அதைச் செலுத்தியாகச் சந்தேகிக்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
கொவிட்-19 வைரஸ் முதியவர்களுக்குத் தொற்றினால் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தாதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர் சமூக ஊடகப் பக்கங்களில் தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்தார் என்று பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.