கோவில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு!!
தமிழ் நாட்டின் தஞ்சாவூரிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
குறித்த சம்பவத்தை சிலர் அரசியலாக்க முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அப்பர் குருபூஜையின் 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்ற போது அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூருக்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையினையும் வழங்கி வைத்தார்.
இதேவேளை, சம்பவத்தை நேரில் பார்த்த நபர் கூறுகையில்,
“தேர் ஊரை சுற்றிவிட்டு கடைசியாக ஒரு வீட்டில் சாமிக்கு பூஜை, தேங்காய் உடைத்துவிட்டு கோவிலுக்கு திரும்பும்போது வீதிக்கு மேல் உயர்மின்சாரக் கம்பி அருகில் இருந்துள்ளது.
தேரை இழுத்தவர்கள் அதனை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டதால், மீண்டும் தேரை பின்னால் இழுத்து திருப்ப முடியவில்லை.
பின்னர் வீதியின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்துள்ளனர். அப்போது தேரின் உச்சியில் மடக்கி தூக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த கும்பம், வீதியின் மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது.
வீதியில் தேரை திருப்பும்போது தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தவில்லை. இதை தேரை இழுத்த நபர்களும், சிறுவர்களும், ஜெனரெட்டரை இயக்கி வந்த நபரும் கவனிக்கவில்லை.
தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தாததால் தேரை திருப்பும்போது வீதியின் மேல் சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பி தேரின் உச்சியை உரசியுள்ளது.
இதன் காரணமாக, உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம், தேர் மற்றும் ஜெனரேட்டை கொண்டு வந்த வாகனம் மீது பாய்ந்தது. இதனால் தேரில் இருந்தவர்கள், தேரை பிடித்திருந்தவர்கள் உட்பட பலர் மீது மின்சாரம் பாய்ந்தது” என்றார்.