ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாதளவில் ஏட்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு!!

பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் எரிவாயு துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் எதிர்வரும் கோடைகாலத்தில் குளிரை அல்லது அதிகமான எரிவாயுக்கான மின் கட்டணத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானியாவின் எரிசக்தி கைத்தொழிற்துறையானது குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ளும் என துறைசார்ந்த தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் மொத்த எரிவாயு விலையானது என்றுமில்லாத வகையில் சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக ஐரோப்பிய நாடுகள் எரிவாயு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதுடன், குறிப்பாக பிரித்தானியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் எரிவாயுவின் விலையானது 250 வீதத்தால் உயர்வடைந்துள்ளது. அத்துடன் கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் எரிவாயு விலையானது, 70 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக பிரித்தானியாவின் எண்ணெய் மற்றும் வாயு வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.

பிரித்தானியாவில் வாயுச் சந்தையானது மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுவதுடன், குறிப்பாக வெப்பமாக்கல், தொழில்துறை மற்றும் மின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு வாயு மூலம் பெறப்படும் சக்தியே பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள 22 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு வாயு இணைப்பே வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு உள்நாட்டு வெப்பமாக்கலுக்கு 38 வீதமும் மின்சார உற்பத்திக்கு 29 வீதமும் கைத்தொழிற்துறை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு 11 வீதமும் எரிவாயு ஊடான சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று முடக்கநிலைக்கு பின்னர் பொருளாதார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதால், உலகளாவிய ரீதியில் எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாண்டு குளிர்காலம் நெருங்கும் நிலையில், அதிக வாயுத் தேவை ஏற்பட்டுள்ளமையும் இறுக்கமான வாயுச் சந்தைக்கு வழிகோலியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயு விநியோகப் பற்றாக்குறை காரணமாக பாரிய அளவான குறுகிய கால பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதை நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

<

எனினும் கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மீள் எழுச்சி செயற்பாடுகள் காரணமாக இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகப் பொருளாதாரமானது வழமையான நிலைமைக்கு திரும்பும் தருணத்தில் சந்தையானது தன்னை தானே நிலைநிறுத்திக்கொள்ள ஆரம்பிக்கும் போது சிறப்பான நிலைமை உருவாகும் என பொறிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐரோப்பாவில் சடுதியாக ஏற்பட்டுள்ள வாயு விலையேற்றத்தின் பின்னணியில் ரஷ்ய அரசாங்கத்திற்கு சொந்தமான கஸ்புறம் வாயு நிறுவனம் உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கஸ்புறம் வாயு நிறுவனத்தின் சந்தேகத்திற்கிடமான நடத்தைகள் காரணமாக செயற்கையாக சந்தையில் வாயு விலைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ரஷ்ய வாயு நிறுவனமான கஸ்புறம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களுக்கு அமைய எரிவாயுவை விநியோகித்துவருவதாக குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *