47 KG கட்டியை பெண்ணின் வயிற்றிலிருந்து வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை!!
இந்தியாவின் குஜராத் மாநிலம், அஹமதாபாத்தில் பெண்ணின் வயிற்றிலிருந்து 47 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
56 வயது பெண் சுமார் 18 வருடங்களாக இந்த கட்டியோடு வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்தியாவில் இதுவரையிலும் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டதில் இதுதான் மிகப்பெரிய கட்டி என்று கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சையின் போது அதனுடன் சேர்த்து சில திசுக்கள் மற்றும் கூடுதலான சதைப்பகுதி உள்ளிட்டவையும் அகற்றப்பட்டன. மொத்தத்தில் 54 கிலோ எடை உடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மருத்துவர் கூறுகையில்,
“அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளியால் எழுந்து நிற்க முடியவில்லை என்ற காரணத்தால் அவரது எடையை சரியாக நாங்கள் கணிக்க முடியவில்லை.
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரது உடல் எடை 49 கிலோவாக இருக்கிறது.
உடலில் இருந்து அகற்றப்பட்ட கட்டியின் எடை, அவரது உடல் எடையை விட கூடுதலாகவே இருந்தது” என்று கூறினார்.
குறித்த பெண்ணின் மூத்த மகன் கூறுகையில்,
“தொடக்கத்தில் கட்டி இந்த அளவுக்கு பெரிதாக இல்லை, ஆனால் வயிற்றுப் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எங்கள் அம்மாவுக்கு திடீரென எடை கூடிக்கொண்டே போனது.
இது வாயு பிரச்சினை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதி, சில ஆயுர்வேத மற்றும் அலோபதி மருந்துகளை எனது தாயார் எடுத்துக் கொண்டார்.
ஆனால், 2004ஆம் ஆண்டிலிருந்து அது மிகப் பெரியதாக வளர தொடங்கியது” என்று கூறினார்.
தொடக்கத்திலேயே இந்த கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள பெண்ணின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
ஆனால்,
அந்த கட்டியானது உடலுறுப்புகளின் பல இடங்களில் இணைக்கப்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை அபாயகரமானது என்று மருத்துவர்கள் கருதினர்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளில் கட்டியின் அளவு இரு மடங்காக ஆனது.
இதனால்,
கடுமையான வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார், படுக்கையை விட்டு அவரால் எழுந்து வர முடியவில்லை.
தற்போது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கர்ப்பப்பை உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை இந்த அறுவை சிகிச்சை பாதிக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு மேற்கொண்டு சிகிச்சை செய்து கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு வாரம் வரையிலும் அந்த பெண்ணுக்கு சிறப்பு முன் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
4 அறுவை சிகிச்சை நிபுணர்கள் உட்பட 8 மருத்துவர்களை கொண்ட குழுவினர் 4 மணி நேரம் போராடி கட்டியை அவரது உடலிலிருந்து அகற்றினர்.
சிகிச்சை முடிந்து 14 நாட்களுக்கு பிறகு அவர் குணமாகி வீடு திரும்பினார்.