பிரான்ஸின் நிலப்பரப்பிற்கு சமமான அளவில் உலகளாவிய ரீதியில் காடுகள் மீளுருவாக்கம்!!

கடந்த 20 ஆண்டுகளில் பிரான்ஸின் நிலப்பரப்பிற்கு சமமான அளவில், உலகளாவிய ரீதியில் காடுகள் மீளுருவாக்கம் பெற்றுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் வருடமொன்றில் வெளியேற்றப்படும் புகையின் அளவை விட அதிகமான, 5.9 ஜிகாதொன் கார்பன்டையாக்ஸைட்டை உள்ளீர்க்கும் ஆற்றல் மீளுருவாகிய இந்த காடுகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய நிதியத்தின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வரும் ஆய்வாளர்கள் குழுவொன்று செய்மதி தரவுகளைப் பயன்படுத்தி மீளுருவாகியுள்ள காடுகளின் வரைபடத்தை தயாரித்துள்ளது.

காடுகளின் மீள் உருவாக்கம் என்பது மனிதத் தலையீடுகளின்றி அல்லது குறைந்தளவிலான தலையீட்டுடன் இயற்கையாக வளர்வதாகும்.

பூர்வீக மரங்களை நடவு செய்வது, கால்நடைகளுக்கான வேலிகளை இடுவது அல்லது ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுவது போன்ற எவ்வித மனிதத் தலையீடுகளும் இன்றி இக்காடுகள் வளர்ந்துள்ளன.

இவ்வாறு மீளுருவாகும் இயற்கை வனங்கள் பெரும்பாலும் செலவு குறைந்தவை, கார்பன் உள்ளீர்ப்பில் சிறந்தவை என்பதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கு சிறந்தவை என இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதி William Baldwin-Cantello தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான காலநிலை மாற்றத்தை தவிர்க்க இந்த மீளுருவாக்கத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, காடழிப்பை நிறுத்தி இயற்கை வனங்களை மீட்டெடுக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பு அளவில் காடழிப்பு இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *