மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை….. திடீரென இடைநிறுத்தம்!!
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’(Gaganyaan) திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனையாக, TV-T1 விண்கலம் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று (21/10/2023) காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுவதாக திட்டமிப்பட்ட நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வானிலை காரணமாக மாதிரி விண்கலம் 8.30 மணிக்கு தாமதமாக செல்லும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 15 நிமிடங்கள் தாமதம் ஆகலாம் என கூறப்பட்டது .
இந்நிலையில்,
காலை 8.45 மணியளவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த சோதனை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த திட்டத்தை இன்று நடத்த முடியவில்லை எனவும் இந்த கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘விண்ணுக்கு செல்லும் வாகனம்’ என்று பொருள்படும் வகையில், ‘ககன்யான்’ என்று இத்திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வரும் இத்திட்டம் வரும் 2025ஆம் ஆண்டில் செயற்படுத்தப்பட உள்ளது.
அதற்கு முன்பு,
3 கட்ட பரிசோதனைகளை நடத்த இஸ்ரோ திட்ட மிட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டமாக ஆளில்லா மாதிரி விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது.
அதாவது,
மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் விண்கலத்தின் (Crew Module) மாதிரி கலம், தரையில் இருந்து 17 கிலோ மீற்றர் தூரம் வரை அனுப்பப்பட்டு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரப்படும்.
இதில் ஏதேனும் ஒரு சூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தால், அதில் உள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த முதல்கட்ட சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒற்றை பூஸ்டர் (விகாஸ் இயந்திரம்) கொண்ட விண்கலம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த விண்கலம் மூலம் ஆளில்லாத விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான 13 மணி நேர கவுன்ட் -டவுன் நேற்று(20) இரவு 7 மணிக்கு தொடங்கியது.
2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ இலக்கு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.