சாதாரண தர பெறுபேறுகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி !!
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து வெளியிட தீவிரமாக ஆலோசித்துவருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
622,000 மாணவர்களில், 170,000இற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறை பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவது, எதிர்வரும் பரீட்சைகளை நடத்துகின்றமை மற்றும் பெறுபேறுகளை வெளியிடுகின்றமை ஆகிய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் செயன்முறை பரீட்சை பெறுபேறுகள் அத்தியாவசியம் என்றால், அந்த மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் செயன்முறை பரீட்சையின் ஊடாக பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, பெறுபேறுகளை வெளியிட முடியும் என கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பரீட்சை பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடுவதற்கு, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.