இலங்கை வரும் சீன கண்காணிப்பு கப்பல்!!
சீனக் கப்பல்
சீனாவின் விஞ்ஞான கப்பல் இலங்கையின் துறைமுகத்துக்கு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள குழுக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கடற்கரையோரத்தில் உள்ள முக்கிய நிறுவல்களில் பாதுகாப்பை அதிகரிக்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.
சீனாவின் கப்பல் வருவதை அடுத்து தமிழகத்தின் 1076 கிலோ மீற்றர் கடற்கரையில் கடல் துறைமுகங்கள் மற்றும் அணு உலைகள் போன்ற முக்கிய நிறுவல்கள் இருப்பதால் தமிழகத்துக்கு கப்பலின் வருகை எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக தமிழர்கள் வருகின்றமை மற்றும் தீவிரவாதிகளும் வரலாம் என்று அச்சம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரானது என்பதால் தமிழ் பேரினவாத அமைப்புகள் சீனாவின் இராணுவப் பிரசன்னத்தை இலங்கை அனுமதித்ததற்காக இலங்கைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தலாம் என்று தமிழகத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடலோர மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனைத்து முக்கிய நிறுவனங்களிலும் போதுமான காவல்துறையினரை அனுப்பவும் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் சோதனைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.