யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவின்படி 139 நபர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கிடைத்த பி சி ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மொத்தமாக 4 ஆயித்து122 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு இதுவரை வரை 53 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 5 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் ஏற்கனவே தனிமைப் படுத்தப்பட்ட கிராமங்களில் மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச பிரிவுகளில் இருகிராம சேவகர் பிரிவுகள் மாத்திரம் தற்பொழுது தனிமைப் படுத்தப்பட்டு காணப்படுகின்றது.
யாழில் 2 ஆயிரத்து 42 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 712 நபர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தற்பொழுது சற்று கொரோனா நிலைமை அதிகரித்துச் செல்லும் போக்கு நிலைமை காணப்படுகின்றதே தவிர குறைந்ததாக இல்லை.
எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.
பொதுமக்கள் அநாவசியமான பயணங்களை தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டு. பயணத் தடை கட்டுப்பாடுகள் மக்களை தொற்றிலிருந்து கட்டுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மக்கள் அதனை உணர்ந்து அதனை அனுசரித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.