இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் , மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து!!
இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில், இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த உலங்கு வானூர்தி குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இராணுவ உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கிய விபத்தில் இராணுவ அதிகாரிகள் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலியான 4 பேரும் டெல்லியை சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது.
மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏனைய 5 பேர் தொடர்பான விவரங்கள் உடனடியாக எதுவும் தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கதி என்ன என்பதும் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தியில் பயணம் செய்தததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேகமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.