யாழில் முற்றிலும் இலவசமாக சகல வசதிகளுடன் 18 வீடுகளைக் கட்டி….. கஷ்டப்படும் குடும்பங்களுக்கு வழங்கி வைத்த பிரபல தொழிலதிபர்!!
‘இராஜேஸ்வரி திருமண மண்டபம்‘ என்றால் யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
அதன் உரிமையாளரும் வர்த்தகருமான செல்லத்துரை திருமாறன் பல்வேறு சமூகசேவைகளையும் ஆற்றி வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக புன்னாலைக்கட்டுவன் அச்செழு பகுதியில் 18 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.
தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி
அதன்மூலமாக வீடுகள் இன்றிக் கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து
அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்கியிருக்கிறார்.
“குறித்த 18 குடும்பங்களையும் எப்படித் தேர்வு செய்தீர்கள்?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,
‘எமக்கு 300 வரையான விண்ணப்பங்கள் வந்தன.
அவற்றிலிருந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிற,
ஒழுக்கத்துடன் பிள்ளைகளை வளர்க்கின்ற, குடிப்பழக்கம் அற்ற நபர்களைக் கொண்ட குடும்பங்களாகப் பார்த்து தேர்வு செய்தோம்’ என்கிறார் திருமாறன்.
அத்துடன்,
‘இலவச வீடு தானே, எப்படி வேண்டுமானாலும் கட்டிக்கொடுத்து விடலாம் என்கிற எண்ணம் இன்றி
தரமான கட்டிடப்பொருட்களைக் கொண்டு, சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக வீடுகளைக் கட்டினோம்’ என்கிறார் அவர்.
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கும் சூழ்நிலையிலும் ஒன்றல்ல இரண்டல்ல
18 வீடுகளை ஒருவர் கட்டி அவற்றை இல்லாதவர்களுக்கு கொடுத்திருப்பது
மனிதநேயம் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகிறது.
இந்த எண்ணம் உருவானதுக்கு தனது தாயார் திருமதி.இராஜேஸ்வரி அவர்களே முழுக்காரணம் எனக் குறிப்பிடும் திருமாறன் வரும் காலத்திலும் தனது தாயாரின் பெயரில் மேலும் பல சமூகப்பணிகளை ஆற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மனிதநேயம்மிக்க இந்தத் தொழிலதிபருக்கும் அவரது தாயாருக்கும் எமது வாழ்த்துக்கள் என பலரும் தமது கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.