பெண் குழந்தையை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் Covid-19 தொற்றால் மரணம்…. யாழ். போதனா மருத்துவமனையில் நடந்த துயரம்!!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.
அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
“கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது.
தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று புதன்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.