இந்தியாவில் அதிகப் பயன்படுத்தப்படும் உயர் தர ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றான Jio Hotstar, 17 மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை வழங்கும் தளமாகத் திகழ்கிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பால் இந்த தளம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
2024 முதல் 2027 வரை நடைபெறும் ICC உலக நிகழ்வுகளுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமைகளை, சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றிருந்தது.
இந்த பெரும் ஒப்பந்தத்தில் 2024 டி20 உலகக்கோப்பை (ஏற்கனவே முடிவடைந்தது), 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 உலக Test Championship Final, 2025 பெண்கள் உலகக்கோப்பை, 2026 டி20 உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கியமான போட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகள் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல்களிலும் பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி சம்பந்தப்பட்ட அதிக செலவுநட்டங்கள் காரணமாக, ஜியோ ஹாட்ஸ்டர் இந்த ஒப்பந்தத்திலிருந்து 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னரே வெளியேற விருப்பம் இருப்பதாக ICCக்கு தெரிவித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ICC இப்போது சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஸ்ட்ரீமிங்/ஒளிபரப்பு கூட்டாளியைத் தேடும் முயற்சியில் உள்ளது. இதற்காக சோனி, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற பல பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. சரியான ஒளிபரப்பாளர் கிடைக்காத நிலை உருவானால், தற்போதைய உரிமைக் கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலை ICCக்கு உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
