ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் குதித்த ஆசிரியர் உதவியாளர்கள்!!
மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக இருக்கின்ற 380 பேருக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஆசிரியர் உதவியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டமானது இன்றைய தினம் கண்டியில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆசிரியர் உதவியாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நாங்கள் பல வருடங்களாக போராட்டம் செய்து வருகின்ற பொழுதும் எங்களுக்கான நியமனத்தை வழங்குவதில் மத்திய மாகாணம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
ஏற்கனவே,
பல முறை எங்களுக்கு நியமனம் வழங்குவதாக கடிதம் அனுப்பியிருந்த போதிலும் அந்த நியமனங்கள் இரத்து செய்யப்பட்டன.
இறுதியாக இந்த மாதம் 18 ஆம் திகதி நியமனம் வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் இறுதி நேரத்தில் அதனை இரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றார்கள்.
ஏனைய மாகாணங்களில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றார்கள்.
எனவே,
எங்களுக்கு மாத்திரம் ஏன் இந்த நியமனத்தை வழங்குவதற்கு மத்திய மாகாணமும் ஆளுநரும் இழுத்தடிப்பு செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த 380 பேரில் நுவரெலியா மாவட்டத்தில் 198 பேரும் கண்டியில் 17 பேரும் மாத்தளையில் 5 பேரும் பெரும்பான்மை சமூகத்தில் 54 பேரும் கோப்புகள் பூர்த்தி செய்யப்பட்டவர்கள் 35 பேரும் கோப்புகள் பூர்த்தி செய்யப்படாமல் 72 பேரும் என மொத்தமாக 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.