கடிதம் எழுதிவைத்துவிட்டு காணாமல் போன மாணவி – பதற்றத்தில் பெற்றோர் – தீவிர விசாரணையில் பொலிஸார்!!
இரத்தினபுரி – எல்லேகெதர பிரதேசத்தில் 14 வயதான பாடசாலை மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தமது மகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி கடந்த 2 ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.
தனக்கு காதலர்கள் இருப்பதாக பலர் கூறினாலும் தனக்கு அப்படியான தொடர்புகள் இல்லை எனவும் பலர் கூறி வரும் இந்த பொய்யால் தான் வெறுப்படைந்துள்ளதாகவும் மாணவி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
அத்துடன் தன்னை தொடர்புகொள்ளுமாறு தொலைபேசி இலக்கம் ஒன்றை மாணவி கடிதத்தில் எழுதியுள்ளார். எனினும் வீட்டில் இருந்து சென்ற மாணவி, வேறு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து பெற்றோரை தொடர்புகொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அந்த தொலைபேசி இலக்கம் தற்போது செயலிழந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து கடிதத்தில் இருந்த தொலைபேசி இலக்கம் மற்றும் மாணவி தொடர்புகொண்ட தொலைபேசி இலக்கம் என்பவற்றின் தரவுகளை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனை தவிர மாணவியின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த இளைஞரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மாணவி காணாமல் போவதற்கு முன்னர் இந்த இளைஞனை தொடர்புகொண்டிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி எல்லேகெதர பிரதேசத்தை சேர்ந்த இரத்தினபுரி பட்டுஹேன கல்லூரியில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.