நாவலப்பிட்டி, பழைய தொடருந்து நிலைய வீதியில் இன்று (28.11.2025) வீடு ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றுமாத குழந்தை உள்ளிட்ட மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நாலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்தனர். நாவலப்பிட்டிப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின்மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க குடியிருப்பாளர்கள் மற்றும் நாவலப்பிட்டி காவல்துறை அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அது பலனளிக்கவில்லை. உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இதுவரையில் 05பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் தங்குமிட முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
