அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மகனும், ஆசிரியரும் கையும் களவுமாக சிக்கினர்!!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின்  கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில்  தெரியவருகையில்,

 

தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தின் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்திலும் உயர் தர பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன் உயர் தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை இடம் பெற்றது.

இதன் போது,

அடம்பன் மத்தியமகா வித்தியாலய அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.

இந்த நிலையில்,

பாடசாலை அதிபரின் மகனான மாணவன் கணித பாட பரீட்சையின் போது பரீட்சை மண்டபத்தினுள் மறை முகமான முறையில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.

பிறிதொரு பாடசாலையின் பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கணித பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அதனை ஒரு ஆசிரியருக்கு அனுப்பி அதற்கான விடையை குறித்த ஆசிரியர் மீள பெற்று  மாணவனுக்கு கையடக்கத் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

மாணவனுக்கு கையடக்கத் தொலைபேசியின் வாட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதிக் கொண்டிருந்துள்ளார்.

இதன் போது பரீட்சை மண்டபத்தில் பரீட்சை கடமையில் ஈடு பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியை பார்த்து விடை எழுதிக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.

உடனடியாக ஆசிரியர்  மாணவனை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மற்றும் அடம்பன் காவல்துறை ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

உடனடியாக பரீட்சை மண்டபத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்துடன் ஈடுபட்டதாக கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *