கொழும்பில் மீண்டும் பாரிய பதற்ற நிலை….. குவிக்கப்பட்டுள்ள காவல்படை!!

கொழும்பில் ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் போன்று கொழும்பின் பல பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு ஐ.நா காரியாலப் பகுதியிலிருந்து துரத்தப்பட்ட நிலையில் மீண்டும் அப்பகுதிக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் காவல்துறையினரால் துரத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் மீது ஹோர்டன் பிளேஸ் பகுதியில் வைத்தும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதேவேளை தற்போது போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொரளை பகுதியை நோக்கி செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பிரதமர் காரியாலயத்திற்கு முன்பிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதையடுத்து விகாரமகாதேவி பூங்காவில் ஒன்றுகூடி அங்கு எதிர்ப்பினை தெரிவித்த பின்னர் மீண்டும் ஐ.நா காரியாலயத்தை நோக்கி வருகை தந்த வண்ணம் இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் மீண்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமருடைய காரியாலயத்திற்கு முன்பாக வந்துள்ளனர்.

இதனையடுத்து பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வண்ணம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது..

கொழும்பு பௌத்தாலோக பகுதியில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

ஆர்ப்பாட்டத்தினை தடுப்பதற்காக கலகத்தடுப்பு பிரிவினர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள், ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வந்த காவல்துறையினர் பம்பலப்பிட்டி பகுதியில் நின்றுள்ளதையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் பகுதியை நோக்கி விரைந்துள்ளதாக தெரியவருகிறது.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *