மீண்டும் வரிசை யுகம்….. அபாய மணியடித்த ரணில்!!

நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

வரி கொள்கை சம்பந்தமாக நேற்று விசேட உரையை நிகழ்த்தும் போதே அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் வருமானத்தை அதிகரிக்காது, பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் விருப்பமின்றியேனும் கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடும்.

இலங்கையின் கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் முக்கிய நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில், இங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடன் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இலங்கைக்கு கடன் வழங்கிய மூன்று பிரதான நாடுகளான ஜப்பான், சீனா மற்றும் இந்தியாவுடன் பொது மேடைக்கு வந்து, நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கை என்ன என்பதை பற்றி கலந்துரையாடுவதன் இதன் பிரதான நோக்கமாக இருந்தது.

பொது மேடைக்கான அவசியத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் சுட்டிக்காட்டின. இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து பதிலளிப்பதாக சீனாவும் இந்தியாவும் அறிவித்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் புதிய வரி அறவீட்டு முறை முன்வைக்கப்பட்டது.

இந்த முறைமைக்கு அமையவும் 2026 ஆம் ஆண்டின் இலக்கை அடையும் நோக்கிலும் இந்த வரி அறவீட்டை இரண்டு லட்சம் ரூபா வருமானம் பெறுவோருடன் வரையறுக்க முடியுமா என்பது குறித்து திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் கலந்துரையாடின.

எனினும் அந்த நோக்கம் ஈடேறவில்லை. இறுதியில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் மேல் வருமானம் பெறுவோரிடமும் வரிறை அறவிடுவது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறான பின்னணியில் இந்த வரி அறவீட்டு முறையை கையாளவில்லை என்றால், எமக்கு அவசியமான இலக்கை அடைய முடியாது.

அத்துடன் இந்த வேலைத்திட்டத்தில் இருந்து விலகினால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்காது.

சர்வதேச நாணய நிதியத்தின் நற்சான்று கிடைக்கவில்லை என்றால், உலக வங்கி, ஆசிய அபிவிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கும் ஏனைய நாடுகளின் உதவிகள் எமக்கு கிடைக்காது அப்படி நடந்தால், நாம் மீண்டும் வரிசை யுகத்தை நோக்கி செல்ல நேரிடும்.

இதனை விட கஷ்டமான காலம் எதிர்காலத்தில் எமக்கு ஏற்படலாம். கடனை பெற்று கடன் மறுசீரமைப்புக்கும் வேலைத்திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

நாங்கள் இதனை விரும்பி செய்யவில்லை. விருப்பமின்றியேனும் எமக்கு சில முடிவுகளை எடுக்க நேரிடும்” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *