மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கென் கருணாஸ்
கென் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘வடசென்னை’. அன்பு, ராஜன், செந்தில், குணா என நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் அன்புவாக தனுஷ் நடிக்க, ராஜனாக அமீர் நடித்திருந்தார். தனுஷின் அன்பு கதாபாத்திரத்தைப் போல் அமீரின் ராஜன் கதாபாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
வட சென்னை படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவித்தனர். ஆனால் அது அறிவிப்போடு நிற்கிறது. பின்னர் அசுரன், விடுதலை, வாடிவாசல் என அடுத்தடுத்து படங்களில் பிசியாகிவிட்டார் வெற்றிமாறன்.
இந்நிலையில், வடசென்னை படத்தில் இடம்பெறும் ராஜன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் வெப் தொடர் ஒன்றை வெற்றிமாறன் உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை இதில் காட்சிப்படுத்த உள்ளாராம்.
இதில் ராஜனாக கென் கருணாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கென் கருணாசுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதாம். கென் கருணாஸ் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.