மைக் டைசனை அடிக்க தயாராகும் விஜய் தேவரகொண்டா – வைரலாகும் வீடியோ
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது லிகர் திரைப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தை விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தில் அவருக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே பாக்ஸிங் காட்சி உள்ளதாம்.
இதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.