மூன்றாவது அலை மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – சுதர்ஷனி அவசர வேண்டுகோள்!!
கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியமென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மூன்றாவது அலை மோசமான விளைவுகளுடன் ஆரம்பித்துள்ளது. வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது
இதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு மிக மிக அவசியமென்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்திலுள்ளவர்களும் தமது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் எளிதாக அமையுமென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்;
27 நாட்களுக்குள்ளாகவே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் வேகமான அதிகரிப்பும் மரணங்கள் அதிகரிப்பும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது அலை போன்று அல்ல, இது மிக வேகமாகப் பரவக் கூடியதென்பதால் அதிகமானோர் தொற்றுக்குட்படும் அபாயம் உள்ளது.
தடுப்பூசிகளுக்கு உலகளவில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. பணம் படைத்த நாடுகள் ஏற்கனவே அவற்றைப் பெற்று களஞ்சியப்படுத்திக் கொண்டுள்ளன என்பதால் எம்மால் தடுப்பூசிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாமக உள்ளது.
தேவையற்ற நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம். வெளியே சென்றாலும் சுகாதார வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள். முடிந்தளவு விரைவாக வீட்டுக்கு வந்து சேருங்கள்.
மக்கள் அதிகமாக உள்ள கடைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்தவுடன் முடியுமானால் குளித்துவிட்டு உடைகளை கழுவுங்கள். வைரஸ் தொற்றிலிருந்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு சிறந்த வழிமுறையாகும்.
எதிர்வரும் மூன்று, நான்கு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக செயற்பட்டு வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு நாம் மீண்டும் மீண்டும் நாட்டு மக்களை தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
இப்போதைக்கு தேவையான டாக்டர்கள் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், ஆஸ்பத்திரி வசதிகள் உள்ளன. எனினும் தொடர்ச்சியாக வைரஸ் தொற்று நோயாளிகள் அதிகரித்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
எந்தத் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பெற்றுக் கொள்பவர்கள் மரணம் வரை செல்வதை தடுப்பதற்கு தடுப்பூசிகள் பெரிதும் உதவும். தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டாலும் சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம்.