அரச உத்தியோகத்தர்களுக்கான பணிநாட்கள் தொடர்பான சுற்றறிக்கை வெளிவந்தது
நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து அரச அலுவலகங்களிலும் சேவையாற்றும் அரச ஊழியர்களுக்கு வாரமொன்றுக்கு இரண்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும், மாதமொன்றுக்கு அதிக பட்சமாக எட்டு வேலை நாட்கள் விடுமுறை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த விடுமுறைகள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையில் இருந்து கழிக்கப்படக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அத்தியாவசியமான சேவைகளை முன்னெடுக்கும் அரச ஊழியர்களை, வாரமொன்றுக்கு 3 நாட்களுக்கு மேல் கடமைக்கு அழைக்க வேண்டிய தேவை காணப்படுமாயின், அது குறித்து நிறுவன தலைவர் தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த முறையை பின்பற்றி ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்கள் தீர்மானிக்கப்பட்ட பின்னர், அதற்கு உரிய நாளில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கடமைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் மாத்திரம், அதனை அவரது விடுமுறையில் கழிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைக்கு நேரில் சமூகமளிக்காத நாட்களிலும் இணைய முறையில் கடமையாற்றுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.