அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் மரணங்கள் அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்!!
இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அடுத்த 14 நாட்களுக்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை மிக சடுதியாக அதிகரிக்கும். இதனை சுகாதார கட்டமைப்பால் தாங்க முடியாது. நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்தியாக வேண்டும்.
பொருளாதாரத்துடன் முகாமைத்துவம் செய்து, பொருளாதாரத்திற்கு குறைவாக பாதிப்பு ஏற்படும் வகையில் அனைத்து சமூக ஒன்றுக் கூடல்களையும் நிறுத்த நேரிடும்.
மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டும். அத்துடன் தேவையற்ற வகையில் நிறுவனங்களுக்கு ஊழியர்கள் அழைக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நோயாளிகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவில்லை என்றால், நாம் அனர்தத்தை நோக்கி தள்ளப்படுவோம். நாம் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில உயிர்கள் பலியாகும். இதனால், இதற்கான பொறுப்பும் நம் அனைவருக்குமானது.
கீழ் மட்டத்தில் கண்டறியப்படும் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு செல்லாத காரணத்தினால், அவர்களுக்குள் அச்சமோ, உரிய புரிதலோ ஏற்படாது எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.