நூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’
சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தைப் பற்றிய ஒரு அலசல்.
குடும்பம் என்கிற அமைப்பின் சர்வாதிகாரத்தையும், அது எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
பொங்கலுக்கு தென்னிந்தியாவில் மாஸ்டர் படம் பற்றிய பேச்சுகளே அதிகம் இருந்த வேளையில், சைலன்டாக வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ள படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
மலையாளப் படமான இது கடந்த 15ந் தேதி ஓடிடி-யில் வெளியானது. ஜோ பேபி என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நாயகனாக சூரஜ் வெஞ்சரமுடு, நாயகியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். சுமார் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த சினிமா இந்திய பெண்களின் நூறாண்டுகால வலியை பேசுகிறது.
நாயகன் சூரஜ், கேரளாவில் ஒரு அழகான கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கும், நடன ஆசிரியராக இருக்கும் நாயகி நிமிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின் புகுந்த வீட்டுக்கு செல்லும் நிமிஷா, காலை, மதியம், இரவு என மூன்று வேளை சமைப்பதும், பின்னர் பாத்திரங்களை கழுவுவதும், இரவில் கணவருடன் தாம்பத்யம் கொள்வதுமாக அவரது வாழ்க்கை தினசரி நகர்கிறது. ஒரு கட்டத்தில் இயந்திரம் போல் நகரும் அந்த வாழ்க்கை மீது அவருக்கு சலிப்பு ஏற்படவே, அவர் என்ன முடிவு எடுத்தார் என்பது தான் மீதிக்கதை.
ஒவ்வொரு வீட்டின் சமையலறைக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கத்தை எந்த அதீத காட்சிகளுமின்றி யதார்த்தமாக அதன் போக்கில் அம்பலப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜோ பேபி. சமைப்பதை விட சமையலுக்கு பின் இருக்கும் வேலைகள் தான் கஷ்டமானது என நிறைய இடங்களில் உறக்க சொல்லி இருக்கிறார். பெண்களுக்கு நாம கொடுக்க வேண்டிய மரியாதை வேற, நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் மரியாதை வேற என்பதையும் ஆணி அடிச்ச மாதிரி சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜோ பேபி.
கணவன், மனைவியாக நடித்துள்ள சூரஜ், நிமிஷா ஆகியோரின் நடிப்பு எதார்த்தத்தின் உச்சம். நிமிஷாவின் மாமனார் கதாபாத்திரத்தில் வரும் சுரேஷ் பாபு, ஆணாதிக்கம் கொண்டவராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
குறிப்பாக, ‘வெளியே செல்லும் போது செருப்பை எடுத்துக் கொடுக்க மனைவி வர வேண்டும். விறகடுப்பில் தான் சோறு சமைக்க வேண்டும், குக்கர்ல வச்சா பிடிக்காது. வாஷிங் மெசின்ல துணி துவச்சா கெட்டுப் போயிடும். மருமகள் வேலைக்கு போகட்டுமா என கேட்கும்போது, பி.ஹெச்.டி படிச்ச என் மனைவியையே வேலைக்கு அனுப்பல’ என காட்சிக்கு காட்சி அசல் ஆணாதிக்க முகமாக தெரிகிறார் சுரேஷ் பாபு.
படத்தின் நீளமே 100 நிமிடம் தான், அதில் 60 நிமிடம் சமையல் அறையை தான் காட்டுகிறார்கள். சாலு கே தாமஸின் ஒளிப்பதிவும், பிரான்சிஸ் லூயிஸின் படத்தொகுப்பும் ஒவ்வொரு காட்சியையும் சலிப்பு ஏற்படாதவாறு கச்சிதமாக கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
இந்த படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணுக்கும், நாமும் இப்படி தான் இருக்கோம்ல என ஏதோ ஒரு இடத்தில் தோன்றும். அதுவே இந்தப் படத்தின் வெற்றி. கட்டாயம் அனைத்து ஆண்களும் பார்க்க வேண்டிய படம். இது படம் மட்டுமல்ல, ஆண்களுக்கான பாடம் என்றே சொல்லலாம்.