வடக்கு கிழக்கில் ஹர்த்தால் இல்லை….. வடக்கு – கிழக்கு தமிழ் புத்திஜீவிகள் அமையம் !!!
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை காரணங்காட்டி தென்னிலங்கையை சேர்ந்த தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு ஹர்த்தால் என அழைப்பு விடுத்துள்ளன.
இந்த அறிவிப்பு தொடர்பில் தமிழ்மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனவும் வழமை போன்று தத்தமது இயல்பு வாழ்க்கைக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தாலை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆதரவு வழங்குமாறு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து எவ்விதமான அறிவித்தல்களும் வெளியிடப்படவில்லை.
தமிழ் மக்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டாலும், அவர்கள் ஏற்கனவே பல தடவைகள் இதை விடவும் மோசமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்தவர்கள். போர்க்காலத்தில் உணவுத்தடையால், மருந்து தடையால் தமிழ்மக்கள் பெருமளவு அநியாய உயிரிழப்புகளை சந்தித்தார்கள்.
ஆனால்,
இன்றும் தமிழ்மக்களிடம் ஒரு தற்சார்பு வாழ்வியல் எஞ்சியிருக்கிறது.
இப்போது சிங்கள மக்கள் தங்களுக்கு வயிறு காய்கிறது என்கிற படியால் தான் வீதிக்கு வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம் இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளமை தான் என்கிற உண்மையை உணர மறுக்கிறார்கள்.
கடந்த காலங்களில் தமிழ்மக்கள் தமது அடிப்படை அரசியல் உரிமை மறுப்பு பிரச்சினைகளுக்கு ஹர்த்தாலை அனுட்டிக்குமாறு கோரிய போது வவுனியா கடந்து சிங்கள மக்கள் எவ்விதமான ஆதரவும் தெரிவிப்பதில்லை.
அவர்கள்,
தாம் உண்டு தம் வேலை உண்டு என இருப்பார்கள்.
மறுநாள் சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் அது குறித்து எவ்வித செய்திகளும் கூட வெளியாவதில்லை.
அதே போலவே தமிழ் மக்களும் நாளை சிங்கள தரப்புகளால் கோரப்பட்டுள்ள ஹர்த்தால் தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் தாம் உண்டு தம் வேலை உண்டு என இருப்பதோடு வழமை போன்று பாடசாலைகள், வங்கிகள், போக்குவரத்துகள், வர்த்தக சேவைகள் என அனைத்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான ஆட்சியை கொண்டு வந்தவர்கள் 69 இலட்சம் சிங்கள மக்கள். அதனை ஜனாதிபதி தனது பதவி ஏற்பு உரையிலும் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். எனவே உப்புத்தின்றவர்களே தண்ணீரைக் குடிக்கவேண்டும்.
என்ற தமிழ் முதுமொழிக்கு அமைவாக இக்கொடிய ஆட்சியைக் கொண்டு வந்தவர்களே இந்த பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூறவும் வேண்டும். அதனை எதிர்க்க வேண்டிய தார்மீக கடமையும் அவர்களுக்கு தான் உண்டு.
எனவே,
அவர்கள் அதனை பார்த்துக் கொள்வார்கள்.
ஆகவே,
தமிழ்மக்கள் இன்றையநாளை வீணாக பதகளிப்படாமல் வழமை போன்று தத்தமது இயல்பு வாழ்க்கைகளில் ஈடுபடுவதோடு ஒதுங்கியிருந்து வேடிக்கை மட்டும் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
என வடக்கு – கிழக்கு தமிழ் புத்திஜீவிகள் அமையம் தெரிவித்துள்ளனர்.