சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் தோற்றவுள்ள மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சர்!!
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையென கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை தொலைக்காட்சி சேவை ஊடாக முழுமைப்படுத்தவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று காரணமாக கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் முழுமையாக இடம் பெறவில்லை. மாணவர்கள் உளவியல் ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா வைரஸ் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலைகளை மீள திறக்கும் தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பாடசாலையினை திறக்கும் விவகாரத்தில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொலைநோக்கு கல்வி முறைமை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருகெதர மற்றும் இலத்திரணியல் முறைமை ஊடாக தற்போது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொலைநோக்கு கல்வி முறைமை மாணவர்களுக்கு முழுமையான கற்பித்தலை வழங்கும் என்று குறிப்பிட முடியாது.
இருப்பினும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இதனை தவிர்க்கவும் முடியாது. தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கையினை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த தொலைக்காட்சி சேவை ஊடாக கற்பித்தலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.