உணவு வாங்க பணம் இல்லாததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
உணவு வாங்குவதற்கு பணம் இல்லாததால் 60 வயது நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
கல்கமுவ, வலஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம். ரண் பண்டா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தனது மனைவியுடன் சிறிய குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தார் எனவும், வாழ்க்கையை நடத்துவதற்காக கூலி வேலையும் சேனைப் பயிர்ச் செய்கையும் செய்து வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் வீட்டுக்கு அருகே சேனையில் பூசணிக்காய் பயிரிட்டுள்ளார்.
அதற்கு பசளை மற்றும் கிருமி நாசினி இல்லாத காரணத்தால் பூசணி செய்கை பலனளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்,
உண்பதற்கு உணவுப் பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாத காரணத்தால் சில தினங்களுக்கு முன்னர் கணவன் மனைவி இடையில் சச்சரவும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி தமது சேனைக்கு சென்ற நிலையில் கணவர் மாலை வரையும் வீடு திரும்பாத காரணத்தால் மனைவி பேத்தியை அழைத்து “தாத்தாவுக்கு காலை உணவும் இல்லை பகல் உணவும் இல்லை.
நான் பணம் தேடி 250 கோதுமை மா வாங்கி வந்தேன் ரொட்டி தயாரிக்கின்றேன்.
சேனைக்குச் சென்று தாத்தாவை அழைத்து வா என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து,
பேத்தி சேனைக்கு சென்று பார்த்தபோது தாத்தா அங்கியிருக்கவில்லை.
பின்னர் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்தபோது அவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்ததாகவும் கூறப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் குறித்த நபர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.