இலங்கையில் வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என ஆள்மாறாட்டம் செய்து முன்னெடுக்கப்படும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கிக் கணக்குகள் அல்லது கடனட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி போலி குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பும் மோசடிக்காரர்கள், அதன்மூலம் தனிப்பட்ட விபரங்களையும் ‘OTP’ இலக்கங்களையும் பெற்று பணத்தைக் கொள்ளையிடுகின்றனர். மேலும், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் ஊடாக பொலிஸ் சீருடையில் தோன்றி, குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகப் பயமுறுத்தி பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே, அறிமுகமில்லாத இணைய இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட விபரங்களை வழங்காது, சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் குறித்து நேரடியாக வங்கிகள் அல்லது பொலிஸ் நிலையங்களைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
