உலகத் திரைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 98வது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நடிகை டானியல் புரூக்ஸ் மற்றும் நடிகர் லூயிஸ் புல்மேன் ஆகியோர் நேரலையில் இந்தப் பரிந்துரைகளை வெளியிட உள்ளனர். இந்த ஆண்டு லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில், போல் தோமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் உருவான ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் எனதர்’ (One Battle After Another) திரைப்படம் சிறந்த படம், இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் முன்னிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரையன் கூக்லரின் ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் சுமார் 15 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சிறந்த அனிமேஷன் படத்திற்கான பிரிவில் நெட்ஃபிக்ஸ் தயாரிப்பான ‘KPop Demon Hunters’ மற்றும் ஒரு பில்லியன் டொலர் வசூலித்த ‘Zootopia 2’ ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் ‘சிறந்த நடிகத் தேர்வு’ (Best Casting) என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்படுகிறது. வழக்கமாகப் பிரித்தானிய நடிகர்கள் அதிக அளவில் இடம்பெறுவது வழக்கம் என்றாலும், இந்த ஆண்டு வுன்மி மொசாகு மட்டுமே நடிப்புப் பிரிவில் பிரதான நம்பிக்கையாக உள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த ஜெஸ்ஸி பக்லி மற்றும் போல் மெஸ்கல் ஆகியோர் இந்தப் பட்டியலில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள் எனத் திரை விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த பிரம்மாண்டமான ஒஸ்கார் விருது வழங்கும் விழா 2026 மார்ச் 15 அன்று நடைபெறவுள்ளதுடன், இதனைப் பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்கவுள்ளார்.
