பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம் – ஆசிரியர்களின் படுமோசமான செயற்பாடு!!
இலங்கையில் அனைத்து ஆசிரியர்களும் இணையவழிக் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது.
கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவுக்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு புறம்பாகவே இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை.
சுகாதார தரப்பினரது பரிந்துரைகளுக்கமையவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், தலையீடுகளும் காணப்படவில்லை.
தனிமைப்படுத்தலிலுள்ளவர்கள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதினால் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம். அதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன.
இவர்களுக்கு சார்பாக ஆசிரியர்கள் இணையவழிக்கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளமை முற்றிலும் தவறான செயற்பாடாகும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த பிரத்தியேக தொலைக்காட்சி அலைவரிசைகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.