நாடாளுமன்ற தேர்தல் : இன்று வழங்கப்படவுள்ள விருப்பு எண்கள்
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் வழங்குவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) விருப்பு எண்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை ஆராய்ந்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் செலவிடக்கூடிய குறைந்தபட்ச தொகை இன்று (16) வர்த்தமானி மூலம் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் கடந்த 11ஆம் திகதி மதியம் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கமைய வேட்பாளர்களுக்கான விருப்பு எண் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.